Back To List

V-United Kayal Premier League 2018 : Knight Riders Won the Trophy

வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018 : Knight Riders அணி கோப்பையை வென்றது!

ஹாங்காங் மற்றும் காயல்பட்டினத்தில் செயல்பட்டுவரும் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் அகடமி கிளப் சார்பாக காயல்பட்டினம் கடற்கரை அருகில் அமைந்துள்ள ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை மைதானத்தில் 10ஆம் ஆண்டு வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி முதல் மின்னொளியில் நடைபெற்றது.

இத்தொடரில், Knight Riders, Yankees, V2, Kayal Chelsea, Kayal Express, Canton thunders, Le'ma Sports, Fi-Sky Sporting, Yousuf United, Faams, Janseva மற்றும் Madrid Juniors ஆகிய 12 அணிகள் பங்கேற்றன. இவ்வணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இரண்டு பிரிவுகளில் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கும், முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதிசுற்றுக்கும் தேர்வு செய்யப்பட்டன. இதனடிப்படையில் அரையிறுதிக்கு Knight Riders மற்றும் Yankees அணிகள் தகுதிபெற்றன. தகுதிசுற்றிக்கு V2, Le'ma Sports, Kayal Chelsea மற்றும் Faams அணிகள் தேர்வாகின. அப்போட்டிகளில் வெற்றிபெற்ற Kayal Chelsea அணி Knight Riders அணியுடனும், V2 அணி Yankees அணியுடனும் அரையிறுதிப் போட்டியில் விளையாடின. அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற Knight Riders மற்றும் Yankees அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

இறுதிப் போட்டியின் சிறப்பு விருந்தினராக, குண்டு எறிதல் போட்டியில் தேசிய அளவில் 7 முறை தங்கப்பதக்கத்தை வென்றவரும், தெற்குஆசிய விளையாட்டு போட்டியில் ஒருமுறை தங்கப்பதக்கத்தை வென்றவரும், உலக ரயில்வே துறைக்கு இடையிலான போட்டியில் ஒருமுறை தங்கப்பதக்கத்தை வென்றவருமான திருமதி. நிக்கோலஸ் லதா அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு முன்னதாக வயதுமூத்தோர் (Veterans) பங்கேற்ற கால்பந்து காட்சிப்போட்டியும், இளைஞர்கள்  (Under 14) பங்கேற்ற கால்பந்து காட்சிப்போட்டியும் நடைபெற்றது. இறுதிப்போட்டி துவங்குவதற்கு முன்னர், சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு இரண்டு அணி வீரர்களும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். பின்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் Knight Riders அணியினர் 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கோப்பையை தட்டிச்சென்றனர்.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் துவக்கமாக ஹாஃபிழ் முஜாஹித்அலி இறைமறை வசனத்தை ஓதினார், ஹாஃபிழ் எஸ்.கே. சாலிஹ் வரவேற்புரையாற்றினார், அதனைத் தொடர்ந்து சிறப்புவிருந்தினர் அவர்களுக்கு சகோ. அபூபக்கர் அவர்கள் சால்வை வழங்கினார்கள். நடுவர்கள், மைதானம் உருவாக உழைத்தவர்கள் கவுரவிக்கப்பட்டார்கள். பின்னர் சிறப்பு விருந்தினர் வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்தவர்களுக்கான தனிநபர் பரிசுகளும், அணிக்கான காசோலை மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. இறுதியாக சகோ. ஜஹாங்கிர் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிகளை சகோ. ஹாஃபிழ் எஸ்.கே. சாலிஹ் தொகுத்து வழங்கினார்.